திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.46 திருஆவடுதுறை - திருத்தாண்டகம்
நம்பனை நால்வேதங் கரைகண் டானை
    ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லா லிருந்தான் றன்னைக்
    கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்
    திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
1
மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை
    வெண்முகிலா யெழுந்துமழை பொழிவான் றன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
    தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி
என்னானை யெந்தை பெருமான் றன்னை
    இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
2
பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்
    பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் றன்னைச்
    சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை
    வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
3
பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
    பித்தரா மடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை இடர்க்கடலுள் சுழிக்கப் பட்டிங்
    கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்
தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்
    சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்
ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
4
ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை
    உதயத்தி னுச்சியை உருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
    பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
    தீங்கரும்பின் இன்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
5
ஏற்றானை யெண்டோ ளுடையான் றன்னை
    எல்லில் நடமாட வல்லான் றன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக்
    குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் றன்னை
நீற்றானை நீளரவொன் றார்த்தான் றன்னை
    நீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
6
கைம்மான மதகளிற்றை யுரித்தான் றன்னைக்
    கடல்வரைவான் ஆகாச மானான் றன்னைச்
செம்மானப் பவளத்தைத் திகழு முத்தைத்
    திங்களை ஞாயிற்றைத் தீயா னானை
எம்மானை யெம்மனமே கோயி லாக
    இருந்தானை என்புருகு மடியார் தங்கள்
அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
7
மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை
    வெள்ளடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்
கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த
    கண்ணானைக் கண்மூன் றுடையான் றன்னைப்
பையா டரவமதி யுடனே வைத்த
    சடையானைப் பாய்புலித்தோ லுடையான் றன்னை
ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
8
வேண்டாமை வேண்டுவது மில்லான் றன்னை
    விசயனைமுன் னசைவித்த வேடன் றன்னைத்
தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்
    சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட வுதைசெய்த மைந்தன் றன்னை
    மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்
ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
9
பந்தணவு மெல்விரலாள் பாகன் றன்னைப்
    பாடலோ டாடல் பயின்றான் றன்னைக்
கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்
    கோலமா நீல மிடற்றான் றன்னைச்
செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத்
    திருமார்பிற் புரிவெண்ணூர் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
10
தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் றன்னைத்
    தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் றன்னைப்
பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
    பெருவலியால் மலையெடுத்த அரக்கன் றன்னை
நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை
    நீசனேன் உடலுறுநோ யான தீர
அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய
    அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.47 திருஆவடுதுறை - திருத்தாண்டகம்
திருவேயென் செல்வமே தேனே வானோர்
    செழுஞ்சுடரே செழுஞ்சுடர்டநற் சோதி மக்க
உருவேயென் னுறவே யென்னூனே ஊனின்
    உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
    கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோ யடையா வண்ணம்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
1
மாற்றேன் எழுத்தஞ்சு மென்றன் நாவின்
    மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்
ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்
    எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு
    வேதனைக்கே இடங்கொடுத்து நாளு நாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
2
வரையார் மடமங்கை பங்கா கங்கை
    மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்
உரையா வுயிர்போகப் பெறுவே னாகில்
    உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே
கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்
    காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்
கரையா அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
3
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்
    சிலைவளைவித் துமையவளை அஞ்ச நோக்கிக்
கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்
    களிறுரித்த கங்காளா எங்கள் கோவே
நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்
    நில்லா வுயிரோம்பு நீத னேனான்
அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
4
நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி
    நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்
துறவாத துன்பந் துறந்தேன் றன்னைச்
    சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னே
உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட
    ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட
அறவா அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
5
கோனா ரணன்அங்கந் தோள்மேற் கொண்டு
    கொழுமலரான் றன்சிரத்டதைக் கையி லேந்திக்
கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
    கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்
நானார் உமக்கோர் வினைக்கே டனேன்
    நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
6
உழையுரித்த மானுரிதோ லாடை யானே
    உமையவள்தம் பெருமானே இமையோ ரேறே
கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா
    கயிலாய மலையானே உன்பா லன்பர்
பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்
    கடனன்றே பேரருளுன் பால தன்றே
அழையுறுத்து மாமயில்கள் ஆலுஞ் சோலை
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
7
உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோர்
    உலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு
கலந்தார் மனங்கவருங் காத லானே
    கனலாடுங் கையவனே ஐயா மெய்யே
மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய
    மயக்குளே விழுந்தழுந்தி நாளு நாளும்
அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
8
பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்
    பசுவேறி யூரூரன் பலிகொள் வானே
கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்
    கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்
எல்லாரு மென்றன்னை இகழ்வர் போலும்
    ஏழையமண் குண்டர்சாக் கியர்க ளொன்றுக்
கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
9
துறந்தார்தந் தூநெறிக்கட் சென்றே னல்லேன்
    துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்
பிறந்தேன் நின்றிருவருளே பேசி னல்லாற்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் றன்னைச்
    செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்
    ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com